தமிழ்நாட்டுக்கு மகாராஷ்ட்ரா தேர்தல் சொல்லும் பாடம்!

Fadnavis with shindey and Pawar
பட்னாவிஸ், ஷிண்டே, பவார்- வெற்றிக் கூட்டணி
Published on

இந்த தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என அறிவித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறி உள்ளன மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியின் கட்சிகளான சிவசேனா(உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்), காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும். தோல்விக்குப் பின் இப்படிப் பேசுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்கே அதிக இடங்களை இந்தியா கூட்டணிதானே பெற்றது? அப்போது வாக்குப் பதிவு எந்திரங்கள் பற்றிப் பேசினார்களா என்று எதிர்க் கேள்வி போட்டுள்ளது பாஜக.

இந்தியாவின் பொருளாதார சக்திமைய மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிர தேர்தலில் ஆளும் கூட்டணியான மகாயுதியே அபார வெற்றி பெற்ற நிலையில் யார் முதல்வர் ஆவது என்ற பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கிவிட்டன.

பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவு, அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு ஆகிய மூன்றும் இணைந்துதான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்திருந்தன. சிவசேனா என்ற போர்க்குணம் வாய்ந்த கட்சி உடையுமென்றோ, உத்தவ்தாக்கரேயை மீறி ஏக்நாத் ஷிண்டே செல்வார் என்றோ ஒரு காலத்தில் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதேபோல் சரத்பவாரை மீறி அஜீத் பவார் செல்வார் என்றும் யாரும் நம்பியிருக்கவில்லை. இதெல்லாம் பழங்கதை. இப்படி அதிகாரம் மிகுந்த தலைமைகளை எதிர்த்துச் சென்றவர்களை இந்தத் தேர்தலில் மக்கள் ஏற்றுக்கொண்டு வாக்களித்திருப்பது புதிய கதை.

ஏக்நாத் ஷிண்டே என்ற பெயர் தமிழக அரசியலில் மிகப் பிரபலம். ஒவ்வொரு அரசியல் விமர்சகரும் தமிழக அரசியலில் யார் அடுத்த ஏக் நாத் ஷிண்டே ஆவார் என்று பலரையும் குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருப்பது சகஜமான காட்சி.

அதை விடுங்கள். இப்போதைய நிலைக்கு வருவோம். 288 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 235 இடங்களை மகாயுதி வென்றுள்ளது. எம்.வி.ஏ கட்சிகள் எல்லாம் சேர்ந்து 50 இடங்களையே பிடித்தன. இதனால் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் என்றே ஒருவர் இன்னும் ஐந்தாண்டுகளுக்குக் கிடையாது என்ற நிலை. இவ்வளவு பெரிய வெற்றி கடந்த எழுபது ஆண்டுகளில் எந்தக் கட்சிக்கும் கிடைத்தது இல்லை என்பது மிகப்பெரிய செய்தி.

ஆறு மாதம் முன் நடந்த நாடாளுமன்றத்தேர்தல்களில் சிவசேனா( உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத்பவார்), காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்விஏ கூட்டணி மாநிலத்தின் 48 இடங்களில் 31 இடங்களை வென்றிருந்தது. 17இடங்கள் மட்டுமே மகாயுதி வென்று இருந்தது.

இதே முடிவுகள்தான் இந்த சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிக அபாரமானதொரு வெற்றி மகாயுதிக்குக் கிடைத்துள்ளது. என்ன நடந்தது?

முக்கியமான விஷயமாகச் சுட்டிக்காட்டப்படுவது கடந்த ஜூலை முதல் 21- வயதிலிருந்து 65 வயதுக்குள் ஆண்டுக்கு குடும்பவருமானம் 2.5 லட்சத்துக்குள் கொண்டிருக்கும் பெண்களுக்கு மாதம் தோறும் நேரடியாக மாதம் 1500 ரூ வழங்கப்படுவது. லட்கி பஹின் யோஜனா என்ற முதலமைச்சரின் இத்திட்டத்தில் பலனடையும் 2.34 கோடிப் பெண்களில் பலருக்கு தேர்தலுக்கு முன்பாக 7500 ரூபாய் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிட்டது! தமிழ்நாட்டில் உள்ள மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்தான்! ஏற்கெனவே மத்திய பிரதேசத்தில் இதை அறிமுகப்படுத்தி அங்கே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தது!

இம்முறை தேர்தலில் வாக்களித்த பெண்களின் எண்ணிக்கை ஆறு சதவீதம் அதிமாகவே இருந்தது. வெற்றிக்குப் பின்னர் எனக்கு ஆதரவளித்த பெண்களுக்கு நன்றி என ஏக்நாத் ஷிண்டே சொன்னதில் உண்மை இருந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தொகையை உயர்த்தி 2100 ஆகத் தருவோம் என்பது தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.

கிராமப்புறங்களில் சோயா, பருத்தி விவசாயிகளின் பிரச்னைகளால் இருந்த அவப்பெயரை இந்த நேரடி பணப் பலன் தற்போதைக்கு காணாமல் போகச் செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஓபிசி பட்டியலில் மராத்தா இனத்தாரை சேர்க்காததால் ஆளும் கூட்டணி மீது அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் இவர்கள் இந்த தேர்தலில் எம்விஏ பின்னால் அணி வகுக்க முடியாத அளவுக்கு உள்ளூர் பிரச்னைகளை பாஜக முன்வைத்தது. அதே சமயம் ஓபிசிகள், தலித்துகள் வாக்குகளை தங்கள் கூட்டணிக்கே அது அமைதியான முறையில் மடை மாற்றம் செய்துகொண்டது.

அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி தனித்துப் போட்டியிட்டது. ஓரிடத்திலும் வெல்ல வில்லை. ஆனால் சுமார் 20 இடங்களில் எம்விஏ வின் வேட்பாளர்களுக்கு தோல்வியை பரிசாக அளித்ததின் இதன் பங்கு முக்கியமானது. அப்புறம் சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பின்புலமாக இருந்து கடினமாக உழைத்தது இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்ததாகக் கூறுகின்றனர்.

மகாராஷ்டிர அரசியலில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த சரத்பவாரின் அரசியல் காலம் இந்த தேர்தலுடன் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதலாம். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், பவாரின் சவாலை முறியடித்து ஆட்சி அமைத்ததுடன் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிராவின் பெருந்தலைவராக இனி அவரே அறியப்படுவார் என்கிறார்கள். வழக்கம்போல தோல்விக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து ராகுல் காந்தி பெருமளவுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாததும் ஒரு காரணமாகச் சுட்டப்படுகிறது.

இருக்கும் கூட்டணியை கெட்டியாகப் பிடித்துக்கொள்வது, மக்கள் நலத்திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்துவது ஆகிய இரண்டும் இத்தேர்தலில் மகயுதியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் பயன்படுத்த சில தந்திரங்களை இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம். அதே சமயம் ஏக்நாத் ஷிண்டேக்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதை மறக்கக்கூடாது!

ஆதிவாசிகளின் சீற்றம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியினருக்கான 28 தனித் தொகுதிகளில் 27 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணியினர் வெற்றி பெற்றுள்ளனர். 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களை வென்றது. இது கடந்த 2019 தேர்தலில் வென்றதை விட 9 இடங்கள் கூடுதல்.

பாஜக, வங்கதேச ஊடுருவல்காரர்கள் ஆதிவாசிப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதுடன் ஆதிவாசி நிலங்களைப் பறித்துக்கொள்வதாக பரப்புரையில் ஈடுபட்டது. இந்த ஊடுருவல்காரர்கள் பிரச்சாரம் ஆதிவாசிகள் மட்டுமல்ல பிறரிடமும் எடுபடாமல் போய்விட்டது.

ஊழல் குற்றச்சாட்டில் ஜே எம் எம் கட்சியின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலையில் பிணையில் வெளியே வந்தார். இதற்கிடையில் அவரது அண்ணி சீதா சோரன், பாஜகவில் சேர்ந்துவிட்டார். ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்து அந்த இடத்துக்கு அவரது மனைவி கல்பனாவைக் கொண்டுவர முயற்சி செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் சம்பு சோரன் என்பவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஹேமந்த் வெளியே வந்தவுடன் சம்புவிடம் இருந்த பதவி மீண்டும் ஹேமந்த் சோரனிடம் வந்து சேர்ந்தது. ஆனால் சம்புவுக்கு வருத்தம். தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி அவரும் பாஜகவில் சேர்ந்துவிட்டார்.

இத்தனை பிரச்னைக்கு, நடுவில் கூட்டணிக் கட்சிகளை ஒழுங்காக வழி நடத்தி ஹேமந்த் சோரன் ஆட்சியை மீண்டும் பிடித்துவிட்டார். வெற்றிக்குப் பின்னர் டெல்லிக்குப் போய் பிரதமர் மோடியையும் அவர் சந்தித்துப் பேசினார். தன் பதவியேற்புக்கு அவரையும் அழைத்து இருக்கிறார்.

அரசியல் என்பது ஒரே ஆண்டில் சிறைக்கு அனுப்பும்; கட்சியை உடைக்கும்; ஆட்சியிலும் அமர வைக்கும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com